Wednesday, January 21, 2015

தேவதைகள்

'அம்மா ஏம்மா உன் வயித்துல கோடு கோடா இருக்கு'
'நீ என் வயித்துல இருந்தல்ல அதனால கோடு வந்துடுச்சு'
'வயித்துல இருந்தா கோடு வருமா'
'ஆமாம்ப்பா, அம்மா வயிறு அப்போ ரொம்ப பெரிசாயிடுச்சு, அதனால தான் கோடு வந்துடுச்சு'
'ரேணுகா சித்தி வயிறு மாதிரியா'
'ஆமாம்ப்பா......'
'நான் வெளில வரும் போது உனக்கு வலிச்சுதா'
'ஆமாம்ப்பா'
'எனக்கு முள் குத்தினப்ப வலிச்சுதே அது மாதிரியா'
'அதைவிட கொஞ்சம் பெரிய வலி'
'ம்ம்ம்....கீழ விழுந்து கைல சிராய்ச்சிகிட்டேனே அந்த மாதிரி வலியா'
'ஏன் இப்போ இதையெல்லாம் கேக்கறே...?'
'சொல்லும்மா......'
'அதைவிடவும் பெரிய வலிப்பா'
'அப்போ மாடிப் படிலேர்ந்து விழுந்து எலும்பு முறிஞ்சுதே அந்த மாதிரி வலியா'
'ஐயோ, உனக்கு ரொம்ப வலிச்சுருக்குமேடா கண்ணா!'
'ஏம்மா, எப்பவோ அடிப்பட்டதுக்கு இப்ப அழறே'
'இல்லைடா, உன் வலிக்கு முன்னாடி என் வலி ஒரு பெரிய விஷயமேயில்லை....'
'வலிக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியுமா
'தெரியும்ப்பா'
'அப்புறம் ஏன் என்னை பிறக்கவெச்சே'
'ஐயோ பேசாம தூங்கேன், பெரிய மனுஷன் மாதிரி கேள்வி கேக்கற.....'

"கல்யாணியம்மா, கல்யாணியம்மா, யாரை தூங்க சொல்லிட்டு இருக்கீங்க, கனவுல பையனா? உங்க பையன் தான் லெட்டர் போட்டிருக்கிறார்"
"எங்க கொடுங்க...."
"என்ன சிரிக்கிறீங்க கல்யாணியம்மா, பையன் பார்க்க வராராமா"
"இல்லை, இப்போ முடியலயாம், அடுத்த வாரம் வரானாம்"
"இதோட இருப்பத்தஞ்சாவது முறையாய் இதையே எழுதியிருக்கார், வருத்தமோ, கோபமோ இல்லையா"
"இல்லை முரளி, என் பையனிடமே தொலைந்த என் பையனை அவனாகத் தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இருப்பத்து ஐந்து முறையும் என் நினைவு வந்து தானே அவன் கடிதம் எழுதியிருக்கிறான், நான் எப்படி கோபம் கொள்ள முடியும்."
"எப்பவும் புன்னகையோடையே இருக்கீங்க, உங்களை நினைச்சா ஆச்சரியாமா இருக்கு..."
"ஊண் நிஜம், இந்த உயிர் நிஜம், உறவுகள் நிஜம் அது தந்த வலிகள் நிஜம், நடந்தவைகள் நிஜம், நடப்பவைகள் நிஜம், நடக்கவிருப்பதும் நிஜம், சுகமும் சுமையும் நிஜம். இவை எதுவுமே நிஜமல்ல என்று என் நெஞ்சம் மறுப்பதும் நிஜம். அதனாலேயே புன்னகைக்க முடிகிறது, அன்பு மட்டுமே நிஜம்". கண்ணைமைக்காமல் பார்த்தவனை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தார்.

தேவதைகள் அழகாயிருக்க வேண்டுமென்பதில்லை, இளமையாயிருக்க வேண்டுமென்பதில்லை, சிறகுகள் தேவையில்லை......உள்ளம் கனிந்து புன்னகைக்கத் தெரிந்த யாவருமே தேவதைகள் தான்....