Tuesday, December 16, 2014

வசந்தம் உன் வசம்!

நிகழ்காலத்தை எரித்து
எதிர் காலத்தை சூனியமாக்கும்
கடந்த கால நினைவுகளை எண்ணி
சுடும் எனத் தெரிந்தும்
நெருப்பில் வீழும் விட்டிலாய்
மீண்டும் மீண்டும் அதிலேயே மூழ்கி
வலிக்கும் எனத் தெரிந்தும்
புண்ணைக் கீறி
வலியில் சுகம் கண்டு
கண்ணீர் சிந்தி மிஞ்சியது
கலைந்த கனவுகளின்
எச்சம் மட்டுமே!
எண்ணமிருந்தும் சிந்திக்க மறுத்து
பார்வை இருந்தும் காண மறுத்து
செயலற்று......
சாதித்தது தான் என்ன?
இலையுதிர் காலம் உண்டென்றால்
வசந்தம் வந்தேத் தீரும்!
கதிரவன் வந்தால்
பனி விலகியேத் தீரும்!
மண்ணில் விழுந்த விதை
விருட்சமாகியேத் தீரும்!
தோல்விகள் இங்கே
விதைக்கப் ப்ட்டிருக்கிறது
வெற்றிகள் வந்தேத் தீரும்!
முயற்சியை விருப்பமாக்கு
புகழ் மாலைகள் வந்தேத் தீரும்!
வாய்ப்புகளை வசமாக்கு
வசந்தம் வந்தேத் தீரும்!
இனி காலம் உன் வசம்!










Monday, December 8, 2014

ரிசல்ட்!!!

காலையிலேர்ந்து ஜெயா பரபரப்பாகவே இருந்தாள், திரும்பத் திரும்ப எல்லா தெய்வத்தையும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள்.

"ஏழுமலையானே! வெங்கடேசா என் புள்ளை பாஸ்ஸாகிடனும், நடந்தே உன்னை பார்க்க வரோம்"
"ஆறு, ஏழு மணி நேரம் ஆகுமே, அப்புறம் தரிசனம் உடனேக் கிடைக்கலன்னா அதுக்கு வேற வெயிட் பண்ணனும்........"
"அலிபிரி வழியா வரேன்னு வேண்டிண்டேனா, சின்ன பாதை வழியாவும் போலாம்"
"அப்பா பாத்தியா அம்மாவை ஏழுமலையானையே ஏமாத்தறா"
"நீ சும்மா இருடி, நீயும் தான் எழுதின பாஸ் ஆனயோ! வாய் தான் வளந்துருக்கு...."
"கூல்! இது இல்லண்ணா இன்னோன்னு...."
"அப்படி சொல்லுடி கண்ணா....."
"செல்லம் கொடுத்து அவளை கெடுக்காதீங்கோ"
"இப்போ நாம ரிசல்ட் பாக்க போறோமா இல்லையாம்மா"
"எங்க இந்த கிஷோர், இன்னிக்கு ரிசல்ட் வரும்னு தெரிஞ்சும் இன்னும் தூங்கிண்டு இருக்கான், அவனைப் போய் எழுப்புடி ராதா"
"தூங்கட்டும் ஜெயா, அவன் எழுந்து என்னப் பண்ணப் போறான்"
"நீங்க செத்த பேசாம இருங்கோ, எல்லாரையும் செல்லம் கொடுத்து கெடுக்கறேள்"
"இவ மட்டும் தான் பேசலாம், ராட்ஸசி!"
"மிஸ்டர். ராகவன்! என்ன முனுமுனுப்பு"
"ஹி, ஹி....., டென்ஷன் ஆகாத உடம்புக்கு கெடுதல்னு சொன்னேன்..."

கிஷோர் தூக்கம் கலையாமல், தள்ளாடிக் கொண்டே வந்தான்.

"போச்சு, இந்த EB க்காரன் சமயம் பார்த்து கழுத்தறுத்துட்டான், போன் பண்ணுங்கோ சீக்கரம் கரண்ட் போட சொல்லுங்ககோ"
"எதுக்கு இவ்வளோ டென்ஷன்...."

நான் ஃபோனை எடுப்பதற்குள் கரண்ட் வந்து விட்டது.

"நம்பர் சொல்லுடா கிஷோர்"
"20534589"
"என்னடி அவன் நம்பர் இருக்கா...?"
"இரும்மா, இண்டெர்னெட் ஸ்லோவா இருக்கு, கொஞ்சம் பொறுமையா இரேன்"
"ஏண்டா நம்பர் கரெக்டா, எஃஸம்ல பேர், நம்பர் சரியா எழுதினியா"
"ஏம்மா படுத்தற எல்லாம் சரியா தான் எழுதியிருக்கேன்"
"அப்பா நம்பர் இல்லப்பா...!"
"ஆ......என்னது நம்பர் இல்லையா, தெரியும் எப்பப்பாரு ஒரே ஆட்டம், டிவி......படிக்கறதே கிடையாது.....க்ருஷ்ணா! எனக்கு தலையே சுத்தற மாதிரி இருக்கு"

கிஷோருக்கு கண்ணீர் வர ஆரம்பித்தது.....

"ராதா சரியா பார்த்தியா...?"
"பார்த்துட்டேன்பா"
"நகரு நான் பாக்கரேன்"
"நாட் செலெக்டெட் லிஸ்ட்ல பார்த்துருக்க, செலெக்டெட் லிஸ்ட் தனியா குடுத்துருக்கான் பாரு, அவன் நம்பர் இருக்குடி ஜெயா, மூச்சு விட்டுக்கோடி..."
கிஷோரைக் கட்டிக் கொண்டேன், "பாரு, சமத்துக் குட்டி, பாஸ் பண்ணிட்டடா செல்லம்"
"ராதா கடங்காரி என்னை அம்மாட்ட திட்டு வாங்க வெச்சுட்டா, இருடி உன்னை என்ன பண்ணரேன் பாரு" என்று கத்திக்கொண்டே அவளை துரத்திக் கொண்டே ஓடினான்.

"அப்பா ஒரு வழியா சீட் கிடைச்சுது....இனிமே +2 வரைக்கும் பிரச்சனை இல்லை......"
"ஆனாலும் ஒண்ணாவது சீட்டுக்கு நீ இவ்வளோ டென்ஷன் ஆறதெல்லாம் ரொம்ப அதிகம் ஜெயா"
"சரி திருப்பதிக்கு போய்ட்டு வந்துடுங்கோ"
"என்னது!! நீ தானே வேண்டிண்ட...."
"நீங்க வேற நான் வேறயா...?"
நான் தலை சுத்தி ஸோபாவில் விழுந்தேன்!!!



Tuesday, December 2, 2014

அதுதான் என்ன?

மெத்தென்றிருக்கும் பஞ்சனையல்ல
சுகமாய் சுகந்தம் வீசும் மலருமல்ல
மனதை மதியை மயக்கும் மதுவுமல்ல
தத்தித் தத்தி நடக்கும் தத்தையுமல்ல
ஒளி வீசி சிறகடிக்கும் மின்மினியுமல்ல
தொடுகையிலே குளிரடிக்கும் பனியுமல்ல
புரியாத அர்த்தமெல்லாம்
புரிய வைக்கும் அகராதியுமல்ல
அதுதான் என்ன?
நினைக்கையிலே நெஞ்சினிக்கும்
சின்னத் தீண்டலிலே சிலிர்க்க வைக்கும்
தாரகைகள் அதிசயிக்கும்
அம்புலியும் ஆசை கொள்ளும்
ஆனந்த மழையை அள்ளித் தரும்
மழலையடா! மழலையடா!!

Sunday, November 16, 2014

அப்புனு!

அவன் தான் எனக்கு காதலிக்க கற்றுக் கொடுத்தான். ரசிகையாய் இருந்த என்னைக் காதலியாய் மாற்றினான். வாசனையை சுவாசிக்க சொல்லிக்கொடுத்தான்.

"அப்புனூ! எங்க இருக்க...?"
"இதோ இங்க"
"என்ன செய்யற..."
"வாயேன், வந்து கட்டிக்கோயேன்"
"நான் மாட்டேன்"
"ப்ளீஸ்..."
"இல்லை, ரொம்ப சொர சொரப்பா இருக்கு"
"கட்டிதான் பாரேன், எப்படி இருக்குன்னு தெரியும்"
நான் கட்டிக் கொண்டேன்.
"எப்படி இருக்கு? வாசனையாய் இருக்கா"
"ம், ஆமாம்"
"சொரசொரப்பா இருக்கா"
"சுகமாய் இருக்கு"
"பேசிப் பாரேன்"
"அதுக்கு எப்படி புரியும்"
"புரியுமாம், ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்....எப்படி இருக்கன்னு கேளேன்"
"எப்படி இருக்க?"
"பார், எப்படி அசைகிறதுன்னு..."

எனக்கும் அசைந்தது போல் தான் இருந்தது.

"சரி வா வேலை நிறைய இருக்கு"

விருப்பமில்லாமல் வந்தான்.

மாலை ஆபீஸ் முடிந்து வந்தேன், வாசலில் கண் நிறைய கண்ணீருடன் அப்புனு!

"என்ன ஆச்சு?!"
"அவனுக்கு பல் வலிக்கட்டும்..."
"யாருக்கு?"
"கை முட்டியெல்லாம் வலிக்கட்டும்..."
"என்னன்னு சொல்லு..."
"அவன் பல் ராட்சஸ பல் மாதிரி வெளில வந்துடும்..."
"அப்படி சொல்லாதே! என்ன நடந்தது..."
"என் வேப்ப மரத்த ஒடச்சிட்டான்"
"இல்லடி பல் தேய்க்க குச்சி ஒடச்சுண்டான், இவனுக்கு கோபம்" என்றாள் என் அம்மா.
"இங்க வந்து பாரு அம்மா, எவ்வளோ ஒடச்சுண்டிருக்கான்னு"
"சரி விடு வளர்ந்துடும்...."

சமாதானமாகவேயில்லை, அப்பா, தாத்தா எல்லரிடமும் புலம்பிக் கொண்டேயிருந்தான். அன்று இரவு அப்புனு சரியாக் தூங்கவேயில்லை. வேப்ப மரத்தில் குருவி கட்டிய கூட்டை கலைத்த மாரிமுத்துவுடன் தூக்கத்தில் சண்டைப் போட்டான். Pokemon, BEN 10 எல்லாருமாக சேர்ந்து மாரிமுத்துவையும், குச்சி உடைத்தவனையும் அடித்து நொறுக்கி ஜெயிலில் போட்டார்கள்.

விடிந்ததும் அம்மா ஒரு லெட்டரை கையில் திணித்தாள்.

"நேத்து இவன் பண்ணின அமர்க்களதில் இதை கொடுக்க மறந்துட்டேன்"

லெட்டரை பிரித்தேன், கார்ப்பரேஷனில் இருந்து பாதாள சாக்கடை கட்ட இடைஞ்சலாய் இருப்பதால் வேப்ப மரத்தை வெட்டப் போவதாகவும் அதற்கு பதிலாக வேறு மரக் கண்றுகள் தருவதாகவும் எழுதியிருந்தார்கள்.

என் கண் அப்புனுவை தேடியது....மரத்தைக் கட்டிக் கொண்டு பேசிக்கொண்டிருந்தான். கண்ணீருடன் ஓடி சென்று கட்டிக்கொண்டேன், மரத்தையும், அப்புனுவையும்....

"ஏம்மா அழறே...?"

அழுது கொண்டயிருக்கிறேன், அவனும் கேட்டுக்கொண்டேயிருக்கிறான்
யாராவது அப்புனுவிடம் சொல்லுங்களேன், ப்ளீஸ்............



Saturday, November 15, 2014

மனிதன் இவ்வளவுதான்!

இந்த நீரும் வற்றிப் போகலாம்
மலையும் உடைந்து போகலாம்
மரங்கள் அற்றுப் போகலாம்
காற்றும் காணாமல் போகலாம்
வானம் அறுந்து போகலாம் - பூமியில்
உயிர்களின்றி போகலாம் - மனிதன்
ஆணவம் அகன்றிருக்காது - ஏதோ
ஒரு கிரகத்தில்
அழிவை விதைத்து கொண்டேயிருப்பான்!